நெல்சன் இயக்கும் அடுத்த படம் இதுவா? சிம்பு ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

இயக்குனர் நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’ஜெயிலர்’ படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கசிந்து உள்ளதை எடுத்து சிம்பு ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேற்று நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ’ஜெயிலர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ரஜினிகாந்தின் ஸ்டைல் மற்றும் நெல்சன் பாணி டார்க் காமெடி ஆகிய இரண்டும் சேர்ந்து படத்தை வேற லெவலில் கொண்டு சென்றுள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ’வேட்டை மன்னன்’ என்ற திரைப்படம் உருவாக இருந்தது. இந்த படத்தில் ஜெய், ஹன்சிகா, தீக்ஷா சேத் உள்ளிட்ட பலர் நடிக்க இருந்தனர். எஸ்எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாக இருந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது.

மீண்டும் இந்த படத்தை 2017 ஆம் ஆண்டு தொடங்க நெல்சன் முயற்சித்ததாகவும் ஆனால் அப்போது முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து தான் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் நெல்சன் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ விஜய்யின் ’பீஸ்ட்’ ஆகிய படங்கள் இயக்கிய நெல்சன் தற்போது ரஜினியின் ’ஜெயிலர்’ படத்தை இயக்கி முடித்து உள்ளார்.

இந்த நிலையில் நெல்சனின் அடுத்த படம் எது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்து உள்ள நிலையில் தற்போது வந்துள்ள தகவலைப்படி ’வேட்டை மன்னன்’ படத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதால் சிம்புவின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.