சென்னையில் 42C வரை வெயில்: ஃபனிக்கு பின் அதிகரித்த வெப்பம்
- IndiaGlitz, [Thursday,May 02 2019]
ஃபனி புயல் சென்னையை தாக்கும் என்று எதிர்பார்த்ததால் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு என்றும், அதனால் சென்னையின் தண்ணீர் கஷ்டம் தீரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபனி புயல் திசை திரும்பியது மட்டுமின்றி, அந்த திசை திரும்புதலால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
ஃபனி புயலின் தீவிரம் முற்றிலும் தமிழகத்தை பொருத்தவரை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்று முதல் பெரும்பாலான பகுதிகளில் 40C வரை வெப்பம் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வேலூர், திருத்தணி போன்ற பகுதிகளில் 43 முதல் 44 C வரை வெப்பம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் 42C வரையும், மதுரை, நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, போன்ற பகுதிகளில் 41 முதல் 42 C வரையும், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் 40 முதல் 41 C வரை வெப்பம் இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொருத்தவரை 40C வெப்பம் நிலவும் என்றும், அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், ஒரகடம், உள்ளிட்ட பகுதிகளில் 41 முதல் 42C வரை அதிகபட்ச வெப்பம் நிலவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கடலோர சென்னை பகுதியில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றால் வெப்பம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் இந்த வெப்பத்தில் இருந்து தப்பித்துவிட்டதாகவும், இங்கு பொதுவான வெப்பநிலையே இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும்போது குடை கொண்டு செல்வதும், அதிகமாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.