நயன்தாரா திருமண ஆவணப்படம் விவகாரம்: தனுஷை அடுத்து இன்னொரு நிறுவனமும் வழக்கு..!
- IndiaGlitz, [Monday,January 06 2025]
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், இந்த ஆவணப்படத்தில் தன்னுடைய அனுமதி இன்றி சில காட்சிகளை பயன்படுத்தியதாக தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், தனுஷை அடுத்து தற்போது இன்னொரு நிறுவனமும் இந்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தை சிவாஜி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், இந்த படத்தின் ஆன்லைன் தொடர்புடைய உரிமை உள்ள நிறுவனம் தற்போது நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் ’சந்திரமுகி’ திரைப்பட காட்சியை தங்களுடைய அனுமதி இன்றி பயன்படுத்தியதாகவும், இதற்கு இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக, நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய திருமண ஆவணப்படத்திற்காக காட்சிகள் கொடுத்த உதவியதாக சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.