புதிய புயலால் வரப்போகும் பாதிப்பு… இந்திய வானிலையின் எச்சரிக்கை!!!
- IndiaGlitz, [Friday,November 27 2020]
நிவர் புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பும் பின்பும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதேபோல வரும் நவம்பர் 29 ஆம் தேதி உருவாகக்கூடிய புதிய புயலால் தமிழகத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நவம்பர் 29 ஆம் தேதி உருவாக இருக்கும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக நிவர் புயல் சென்னைக்கு தென்மேற்கு பகுதியில் 95 கி.மீ தொலைவில் உருவானது. இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது பெருத்த சேதத்தை ஏற்படுத்தி 7 மாவட்டங்களில் சுமார் 8,470 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலங்களின் நெற்பயிர்களை நாசம் செய்ததாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் பல மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது. புயலின் தாக்கத்தால் 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல தமிழகத்தில் வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் வங்காள விரிகுடா பகுதியில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது இதனால் தமிழகத்திற்கு மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.