கொரோனா, வெள்ளம், விமான விபத்தை அடுத்து நிலநடுக்கம்: என்னதான் நடக்குது 2020ல்?
- IndiaGlitz, [Saturday,August 08 2020]
இந்த 2020 ஆம் ஆண்டு மனித குலத்தின் அழிவு ஆண்டாக கருதப்படுகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியும், லட்சக்கணக்கானவர்களின் உயிர்களை பலிவாங்கியும் உள்ளது.
மேலும் மாதக்கணக்கில் ஊரடங்கு என்ற கொடுமையையும் பொதுமக்கள் சந்தித்து பெரும் வறுமையை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இழப்பையே மனித இனம் தாங்க முடியாத நிலையில் இருக்கும் போது அடுத்தடுத்து இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது
மகாராஷ்டிரா உட்பட ஒரு சில வட இந்திய மாநிலங்களிலும் கேரளா உள்பட ஒருசில தென்னிந்திய மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தால் உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா மற்றும் வெள்ள சேதத்தின் தவிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் மக்கள் இருக்கும் நிலையில் நேற்று இரவு திடீரென விமான விபத்து ஒன்று கேரளாவில் நிகழ்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலாக ஒடிசா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இன்று காலை 7:10 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் குறித்த சேதம் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை
மொத்தத்தில் 2020 ஆம் ஆண்டில் கொரோனா, வெள்ளம் விமான விபத்து, நிலநடுக்கம் என அடுத்த அடுத்து சோக சம்பவங்கள் நடந்து வருவதால் இந்த ஆண்டு எப்பொழுது முடியும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.,