வேட்டியை மடிச்சி விட்டு நிவாரணப் பணியில் இறங்கிய எடப்பாடியார்!!!
- IndiaGlitz, [Wednesday,December 09 2020]
தமிழகத்தில் நிவர், புரெவி எனும் இரண்டு புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரிசெய்து வருகிறது. மேலும் வெளிப்புற மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட தாக்கத்தையும் தமிழக அரசு சரிசெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
பருவமழை காலமானாலும் புயல் காலமானாலும் கடலூர் மாவட்டத்தில் பெருத்த சேதம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையான சிக்கலையும் சந்தித்து வருகின்றனர். எனவே தொடர்ந்து இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தமிழக அரசு தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பெய்த கனமழையின் காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப பல நாட்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். நேற்று காலை 11.30 மணிக்கு கடலூர் மாவட்டத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் நிவர் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் தண்ணீரில் மூழ்கிய பகுதிகளில் கூட முதல்வர் தன்னுடைய வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். இதை அருகில் இருந்த மக்கள் அனைவரும் மலைத்துப் போய் பார்த்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
மேலும் மக்களிடம் பேசிய அவர் மழை நேரத்து பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார். இறுதியில் அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் முதல்வர் ஈடுபட்டார்.