பிகிலை அடுத்து தமிழில் வெளியாகும் கால்பந்து திரைப்படம்!
- IndiaGlitz, [Tuesday,November 12 2019]
பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிய மூன்றாவது திரைப்படமான இந்த திரைப்படம் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து, தற்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து குறித்த எமோஷனல் காட்சிகள் இளம் பெண்களை பெரிதும் கவர்ந்தது என்றும் குடும்ப ஆடியன்ஸ்கள் இந்த படத்தை விரும்பிப் பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பிகில் படத்தை அடுத்து மேலும் ஒரு கால்பந்து போட்டியை மையமாக வைத்த திரைப்படம் ஒன்று தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து போட்டியின் பயிற்சியாளர் அப்துல் ரஹிம் என்பவரின் உண்மை கதை பாலிவுட்டில் ‘மைதான்’ என்ற டைட்டிலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அப்துல் ரஹீம் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். இவரது மனைவியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவிலும் பிரபலம் என்பதால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தென்னிந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிகில் படம் போலவே கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த கால்பந்து குறித்த கதையம்சம் கொண்ட ‘மைதான்’ற திரைப்படமும் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.