ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் கமல், அமிதாப், மோகன்லால், நாகார்ஜூனா?
- IndiaGlitz, [Wednesday,May 24 2017]
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கனவே இராமாயணம் திரைப்படத்தை ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம். இந்நிலையில் தற்போது ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரத்தை தழுவி ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் அவர்கள் மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கேரக்டரான 'பீமன்' கேரக்டரை தழுவி எழுதிய நாவல் ஒன்று தற்போது ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் தயாராகவுள்ளதாம். பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் 'கர்ணன்' கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனனை படக்குழுவினர் அணுகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து நாகார்ஜூனன் கூறுகையில் 'எனது கேரக்டர் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் இந்த படத்தில் நடிப்பது குறித்து எனது முடிவை தெரிவிப்பேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.