நாம் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். அனிதா மறைவு குறித்து கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,September 01 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
எவ்வளவு பெரிய அவமானம் இது? இந்த விவகாரத்தில் உடனடியாக அந்த பெண் என்ன ஜாதி, மதம், எந்த ஊர் என்று பேச வேண்டாம். அனிதா என்னுடைய மகள் போன்றவள். அவரது பெயர் ஸ்ருதி, அக்ஷரா என்றிருந்தால் மட்டும்தான் நான் அவருக்காக வருத்தப்பட வேண்டுமா?
'நீட்' விவகாரத்தில் நல்ல செய்தி வருமென்று குடுகுடுப்பை ஆட்டியவர்கள் காணாமல் போய் விட்டார்கள். இந்த பெண்ணும் கண்ணை மூடி விட்டார். அனிதா விவகாரத்தில் கடவுளும் கண் மூடி விட்டார்
இந்த விவகாரத்தில் நாமனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். இதற்கு ஜாதி மதம் எதுவும் தடையாக இருக்க கூடாது. திருமாவளவன் போன்ற தலைவர்கள் உடனடியாக களமிறங்க வேண்டும். கட்சி எல்லைகளை எல்லாம் தாண்டி இதில் செயல்பட வேண்டும். அனிதா உங்கள் மகள் போன்றவள். என் மகள் போன்றவள். மத்திய அரசு, மாநில அரசு, நீதின்றம் எல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவை. எனவே அங்கெல்லாம் வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக் கொண்டிருந்ததால் நேர்ந்த விபரீதம் இது.
அனிதா +2 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பார்த்தால் நாம் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம் என்று தெரிகிறது. மாணவிக்கு இன்னும் மன உறுதி வேண்டும் என்று சொல்லப்படும் அறிவுரையினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மாணவர்கள் இதற்காக போராட அவர்களுக்கு அவகாசம் இருக்கிறதா என்று சந்தேகப்படுகிறேன். இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும்.