4 நாட்களுக்கு பின் இன்று திரையரங்குகள் திறப்பு! புதிய கட்டணம் எவ்வளவு?
- IndiaGlitz, [Friday,July 07 2017]
மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிகளால் 58% வரை வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதால் இதனை எதிர்த்து கடந்த திங்கள் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
அரசு தரப்பிலும் திரையுலக பிரபலங்களும் குழு அமைத்து அதில் திரைத்துறை குறித்த அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்கப்படும் என்று கூறியதை அடுத்து நேற்றுடன் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டன. இந்த வாரம் எந்த புதிய தமிழ்ப்படங்களும் வெளியாகவில்லை. கடந்த வாரம் வெளியான 'வனமகன்' மற்றும் 'இவன் தந்திரன்' ஆகிய படங்கள் மற்றும் பிற மொழி படங்கள் இன்று திரையிடப்படுகின்றன
இந்த நிலையில் புதிய சினிமா கட்டணம் குறித்து பார்ப்போம். இதற்கு முன் ரூ.120 என இருந்த சினிமா கட்டணம் இனிமேல் ஜிஎஸ்டி வரி சேத்து 153.60 என வசூல் செய்யப்படும். அதேபோல் ரூ.100க்கான டிக்கெட் ரூ.128, ரூ.90க்கான டிக்கெட் ரூ.106, ரூ.50க்கான டிக்கெட் ரூ.59, ரூ.10க்கான டிக்கெட் ரூ.12 என வசூல் செய்யப்படும்.
மொத்தத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அனைத்து சுமைகளும் பொதுமக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.