30 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன்.. 'தலைவர் 170' கதை இதுதான்..!

  • IndiaGlitz, [Saturday,June 10 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 வது திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்த்,. அமிதாப் பச்சன் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 170’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான ’ஹம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் ’பாட்ஷா’ என்று குறிப்பிடத்தக்கது.

மேலும் ’தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் போலி என்கவுண்டர் கதை அம்சம் கொண்டதுதான் இந்த படம் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இணைந்து நடிக்க உள்ள தகவல் இரு தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.