12 வருடங்களுக்கு முன்.. சிவகார்த்திகேயன் பட நடன இயக்குனரின் மலரும் நினைவுகள்

  • IndiaGlitz, [Wednesday,June 05 2019]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது 12 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு மலரும் நினைவை தனது சமூக வலைத்தளத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார்.

வினய், சதா நடித்த திரைப்படம் 'உன்னாலே உன்னாலே'. இந்த படத்தில் வினய்யின் நண்பராக சதீஷ் கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னை சிட்டி சென்டரில் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் 12 வருடம் கழித்து அதே சிட்டி செண்டரில் அதே இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படுகிறது. 'உன்னாலே உன்னாலே' படத்தில் நடிகராக நடித்த சதீஷ்கிருஷ்ணன், தற்போது 'ஹீரோ' படத்தின் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து வருகிறார். இந்த அபூர்வ ஒற்றுமையை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜூன், இவானா, விவேக், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் 'பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கே.ஆர்.ஜே. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.