ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடுமா? வலுக்கும் சந்தேகம்!
- IndiaGlitz, [Wednesday,August 18 2021] Sports News
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்குபெறுமா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைக்கவுள்ள தாலிபான்கள் ஏற்கனவே பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் டி20 போட்டியில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலைமை என்ன? இதனால் டி20 போட்டியில் விளையாட தாலிபான்கள் அனுமதி அளிப்பார்களா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல் தலைவர் அமீன் சின்வாரி, தாலிபான்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்தமான விளையாட்டு. அதனால் டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தற்போது காபூலில் பத்திரமாக இருப்பதாகவும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் ரஷீத்கான் உள்ளிட்ட 4 பேர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர்.
முன்னதாக தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினர்களை ஆப்கனில் இருந்து மீட்க முடியவில்லை என்று ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வருத்தம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.