தாலிபான்கள் வசம் சென்றுவிட்ட ஆப்கானிஸ்தான்… இனியென்ன நடக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் கடந்த 10 தினங்களாக நாடு முழுவதும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பான வன்முறையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,000 அப்பாவிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நா. தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் காபூலை நேற்று கைப்பற்றியவுடன் ஒட்டுமொத்த நாட்டையும் தாலிபான்கள் தங்களுடைய வசம் கொண்டு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்காவின் நேட்டா படை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அரசை கவிழ்க்கும் நடவடிக்கையில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர். இதன் பின்னணியில் நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்களை தாலிபான்கள் தங்கள்வசம் கொண்டுவந்தனர். இறுதியாக நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை இனி “இஸ்லாமிக் அமீரகம்“ என்று அழைக்கப் போவதாக தாலிபான்கள் அறிக்கை வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தாலிபான்கள் ஆதிகத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடத்தி வந்த ஆப்கானிஸ்தான் இராணுவமும் தற்போது அமைதி காத்து வருகிறது.
தாலிபான்கள் தலைநகர் காபூலை நேற்று கைப்பற்றியவுடன் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். அவருடன் பாதுகாப்பு ஆலோசகரும் தப்பிச்சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காபூலில் உள்ள தங்களது தூதர அமைச்சகத்தை பல உலக நாடுகள் மூடிவிட்டன. இந்தியாவும் தனது தூதர அமைச்சகத்தை மூடிய நிலையில் அதிகாரிகளை பத்திரமாக தனிவிமானம் மூலம் மீட்டுள்ளது. இந்நிலையில் காபூலில் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்படும் என்று நேட்டா படையினர் உத்தரவாதம் அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
காபூலை தாலிபான்கள் கைப்பற்றும் முன்பே மத்திய அரசு 120 இந்தியர்களை தனிவிமானம் வைத்து இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக தாலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டு வந்தனர். ஆனால் உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட்டு விட்டதாக அந்நாட்டு மக்கள் தற்போது குற்றம் சுமத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாலிபான்கள் இன்னும் ஒருசில தினங்களில் ஆப்கானிஸ்தானில் புது அமைச்சரவையை ஏற்படுத்துவார்கள் என்றும் தங்களுடைய நாட்டிற்கு “இஸ்லாமிக் அமீரகம்“ எனப் பெயரிடுவர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. தாலிபான்கள் ஆட்சியமைக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த நாடும் கொடுமையான இஸ்லாமிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டியிருக்கும். அதோடு பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout