ஆப்கானிஸ்தான்- விமானத்தில் ஃபுட்போட் அடித்து உயிரிழந்த நபர்… முக்கிய பிரபலமா?
- IndiaGlitz, [Friday,August 20 2021]
தாலிபான்கள் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இதையடுத்து பதறிப்போன அந்நாட்டு மக்கள் தாலிபான்களின் கொடுமையான சட்டத்தை நினைத்து கடும் பீதியை வெளிப்படுத்தினர். இதனால் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் மக்கள்கூட்டம் அலைமோதத் துவங்கியது.
இந்நிலையில் ஆக்ஸ்ட் 16 ஆம் தேதி காபூலில் இருந்து கந்தகாருக்கு புறப்பட்ட அமெரிக்காவின் போயிங்-17 விமானத்தில் பெண்கள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 640 பேர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றனர். அதே விமானத்தின் டயரைப் பிடித்து 3 பேர் தொங்கியபடி பயணித்தபோது அவர்கள் நடுவானில் இருந்து கீழே விழுந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்தது.
அப்படி உயிரிழந்த 3 பேர் பற்றிய தகவல் தற்போது மீண்டும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர்களில் ஒருவர் அந்நாட்டு தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பது தெரியவந்துள்ளது. ஜக்கி அன்வாரி எனும் 19 வயது இளம் கால்பந்து வீரர் தாலிபான்கள் மீதான பயத்தில் எப்படியாவது தப்பிவிடலாம் என நினைத்து விமானத்தின் டயரைப்பிடித்து தொங்கியபடியே பயணித்து இருக்கிறார்.
விமானம் சிறிதுதூரம் பயணித்தபோது நடுவானில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் பலரும் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.