சாதாரண சைக்கிளை வைத்து தண்டவாளத்தில் சாகசம்!!! ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு!!!

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

 

மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடு இந்தியா. பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள், ரயில்வே மண்டலங்கள், அதன் நிர்வாகம் எனப் பல வருடங்களாக இந்திய ரயில்வே மிகச் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. ரயில்வே துறையில் இருக்கும் மற்றொரு மிகப் பெரிய சவால் அதன் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் நிர்வாகம். இதற்காக பல சிறப்பு பணியாளர்கள் அமர்த்தப்பட்டு மேம்பாட்டு சாதனங்கள் வழங்கப்படுகின்றன. என்றாலும் அத்தனை ரயில்வே நிலையங்களுக்கும் போதுமான சாதனங்கள் இல்லாத நிலையும் இருக்கிறது. இந்நிலையில் தண்டவாளத்தில் ஏற்படும் ஒரு சிறு பிழைக்காக ஊழியர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதை சரிசெய்ய வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

இந்நிலைமையை மாற்றும் வகையில் ஆஜ்மீர் ரயில்வே நிலையத்தில் senior divisional Engineer ஆக பணியாற்றிவரும் பங்கஜ் சோரன் என்னும் அதிகாரி ஒரு சாதாரண சைக்கிளை கொண்டு ஒரு புது கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். அதாவது சாலைகளில் ஓட்டும் சாதாரண சைக்கிளில் சிறு மாற்றங்களைச் செய்து தண்டவாளங்களில் அந்த சைக்கிளை ஓட்ட வைத்து இருக்கிறார். இதனால் பல கிலோ மீட்டர் நடந்து சென்று தண்டவாளப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு பேரூதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சாலைகளில் ஓட்டக்கூடிய சாதாரண சைக்கிளில் சில மாற்றங்களை மட்டுமே அவர் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் மூலம் மிக எளிதாகவும் பத்திரமாகவும் தண்டவாளத்தில் பயணிக்க முடியும் எனவும் பங்கஜ் தெரிவித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இதன் தயாரிப்பு விலை ரூ. 5000 தான். எனவே பணிமனைகளில் இதுபோன்ற சாதனங்களை உற்பத்தி செய்து ஊழியர்களுக்கு வழங்கலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். இந்தப் புது கண்டுபிடிப்புக்காகத் தற்போது பங்கஜ் சோரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.