'பாகுபலி 2' படம் பார்க்க 10 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன். தேசிய விருது இயக்குனர்
- IndiaGlitz, [Thursday,June 08 2017]
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வசூல் ரூ.1700 கோடியை நெருங்கி புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தை பெரும்பாலான திரையுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான அடூர் கோபால கிருஷ்ணன் பாகுபலி 2' படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து பேசியபோது, 'பாகுபலி போன்ற படத்தால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. இந்த படத்திற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய தயாராக இல்லை. ரூ.10 கோடியில் 10 படங்களும், ரூ.100 கோடியில் 100 படங்களும் எங்களால் எடுக்க முடியும்' என்று காட்டமாக விமர்சனம் செய்தார்
மேலும் 'பாகுபலி' திரைப்படம் கடந்த 1951ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு மொழியில் வெளிவந்த 'பாதாள பைரவி' படத்தின் காப்பியே என்றும் அவர் கூறினார். உலகம் முழுவதும் போற்றப்படும் 'பாகுபலி 2' படம் குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.