11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? தாங்குமா சசிகலா அதிமுக!!

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா அணியின் மூத்த உறுப்பினர்கள் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆலோசனை கூறினார்களாம்.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த 122 எம்.எல்.ஏக்கள் தொகுதி திரும்ப முடியாமல் உள்ள நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை சந்திப்பதே சசிகலா அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. இந்த நிலையில், 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதனால் 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் சமாளிப்பது கடினம் என்றும் இதனால் திமுக அந்த 11 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்துவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாம்.

இதனால் இப்போதைக்கு அரசுக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்றும் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆலோசிப்போம் என்றும் டிடிவி தினகரன் தரப்பில் கூறப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் அணியினர்களின் உண்ணாவிரத்தற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது, சசிகலா அதிமுக தரப்பினர்களை கதிகலங்க செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.