அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,December 15 2016]
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவையடுத்து விரைவில் நடைபெற இருக்கும் அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக கட்சியினரால் 'சின்னம்மா' என்று அழைக்கப்படும் வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன் மேற்படி அறிவித்தார். .
"அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பொதுக்குழு கூட்டத்தின்போது சின்னம்மா சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய மனசாட்சி பொன்மனச் செல்வி புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மாவின் மனசாட்சி வாழ்ந்துவருபவர் அம்மாவின் உடன்பிறவா சகோதரி, 33ஆண்டுகாலம் அம்மாவுடைய சுக துக்கங்களில் பங்கேற்று இந்த இயக்கத்தை கண்ணென காட்டி வந்த சின்னம்மா, எனவே சின்னம்மாதான் பொதுச் செயலாளர் என்று automaticஆக, unanimousஆக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை.
கழகத்தின் அனைத்து நிலையிலே உள்ள பொறுப்பாளர்கள்- அமைச்சர்கள். தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், கழகத்தின் 64,0000 கிளைகளைச் சேர்ந்த அனைவரும் 'அம்மாவின் வாரிசுதான் சின்னம்மா, அம்மாவின் மனசாட்சிதான் சின்னம்மா, அவர்தான் இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். சின்னம்மாதான் பொதுச் செயலாளராக வருவார். அதற்கு சின்னம்மாவின் சம்மதத்தை வேண்டுகிறோம். இதுதான் நிலை" என்று கூறினார் பொன்னையன்.