அதிமுக பெண் எம்.எல்.ஏ திடீர் மாயம். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
- IndiaGlitz, [Thursday,February 09 2017]
ஓபிஎஸ், சசிகலா யாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தாலும் அவர் கண்டிப்பாக சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாய நிலை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் முக்கியம் என்பதால் அவர்களை பாதுகாத்து வைப்பதில் அந்தந்த அணி கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஈசிஆர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலிலும், ரிசார்ட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ. கீதா திடீரென காணாமல் போயுள்ளார். அவர் கடத்தப்பட்டாரா? அல்லது ஓபிஎஸ் அணிக்கு மாறுவதற்காக தலைமறைவில் இருக்கின்றாரா? என்பது தெரியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இந்நிலையில் தனது மனைவியும் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏவுமான கீதாவை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறும் அவரது கணவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே 130 எம்.எல்.ஏக்களை காணவில்லை என்று டிராபிக் ராமசாமி இன்று காலை ஒரு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் பெண் எம்.எல்.ஏவை காணவில்லை என்று அவரது கணவரே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.