நேற்றிரவு இருளில் மூழ்கியது சென்னை: காரணம் என்ன? அமைச்சர் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக இருக்கும் நிலையில் நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் , இரவு முழுவதும் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம்., அண்ணா நகர், நந்தனம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். ஒருசில இடங்களில் ஒருமணி நேரத்தில் மின்சாரம் வந்துவிட்டாலும் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே மின்சாரம் வந்தது.

இந்நிலையில் சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது' என்று கூறினார். மேலும் மின் தடை நேரத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.