கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிமுக பிரபலங்கள்

  • IndiaGlitz, [Saturday,December 17 2016]

தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் நாகரீக பாதையில் திரும்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது திமுக தலைவர் கருணாநிதி அவர் விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்தார். அதேபோல் ஜெயலலிதா மறைந்த தினத்தில் அவர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினார்

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவரும் துணை சபாநாயகருமான தம்பித்துரை மற்றும் முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெயகுமார் ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நாகரீக அரசியல் தமிழகத்தில் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.