அதிமுகவின் இந்த தீர்மானங்கள் சாத்தியமா?
- IndiaGlitz, [Thursday,December 29 2016]
இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மறைந்த தமிழக முதல்வர் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாட வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 23ஆம் தேதியை ஏற்கனவே பல ஆண்டுகளாக தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சரண்சிங் பிரதமராக இருந்தபோது விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக இவருடைய பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி என்று கூறப்படும் அதிமுக, விவசாயிகள் தினம் ஒன்று இருப்பதே தெரியாமல் இந்த தீர்மனத்தை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று இன்னொரு தீர்மானம் கூறுகிறது. ஆனால் 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு, மறைந்த ஒருவரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஒரு வேளை, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படுவதற்கு முன்பே, அவர் இறந்துவிட்டால் மட்டுமே, அந்த பரிசு அவரது பெயரில் வழங்கப்படும். எனவே இந்த தீர்மானமும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது.