சசிகலாவை முதன்முதலில் பேட்டி எடுத்தவரின் வித்தியாசமான அனுபவங்கள்
- IndiaGlitz, [Friday,December 30 2016]
ஜெயலலிதாவின் தோழியாக சசிகலாவை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஊடகங்கள் உள்பட வெளியாட்கள் யாருக்குமே சசிகலாவின் குரலைக்கூட இதுவரை கேட்டிருக்க வாய்ப்பில்லை. இதுவரை எந்த மேடையிலும் அவர் பேசியதில்லை, எந்த ஊடகங்களுக்கும் அவர் பேட்டியளிக்கவில்லை
இந்நிலையில் பிரவோக் ஊடகத்திற்காக அப்சரா ரெட்டி என்ற திருநங்கை, சசிகலாவை முதன்முதலாக பேட்டி எடுத்துள்ளார். சசிகலாவை முதன்முதலில் ஊடகத்திற்காக பேச வைத்தவர் என்றும் இவரை கூறலாம்.
வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேட்டிக்காக ஒதுக்கியிருந்தாலும் தன்னுடன் 45 நிமிடங்கள் சசிகலா மனம்விட்டு பேசியதாக அப்சரா கூறியுள்ளார். ஜெயலலிதாவை முதன்முதலில் சந்தித்தது, இந்த முப்பது வருடங்களில் அவருடன் இணணபிரியாமல் இருந்தது முதல் அப்பல்லோவில் உயிர்பிரியும் வரையிலான கடைசி வினாடி வரை தன்னுடைய அனுபவங்களை அப்சராவிடம் சசிகலா மனம்விட்டு கூறினாராம்.
ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக அதே சமயத்தில் நேர்மையாக பதில் சொன்னதாகவும், அரசியல் சம்பந்தப்பட்ட சில சிக்கலான கேள்விக்கும் தெளிவான பதிலை தந்ததை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் அப்சரா கூறியுள்ளார்.
அதிமுகவின் எந்த பதவியையும் தான் பெற முயற்சிக்கவில்லை என்றும் ஒருவேளை நான் விருப்பப்பட்டிருந்தால் அக்கா உயிரோடு இருந்தபோதே தன்னால் எந்த பதவியையும் கேட்டு பெற்றிருக்க முடியும் என்றும் அவர் அப்சராவிடம் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு உணர்ச்சிவசப்படாமல் பக்குவப்பட்டு இருப்பதாகவும், அவரிடம் எடுத்த பேட்டி தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாகவும் அப்சரா ரெட்டி கூறியுள்ளார்.