கொரோனா பாதித்த மாஜி அமைச்சர்....! வதந்திகளை நம்பவேண்டாம் என அறிக்கை....!

என்னை குறித்து சமூக வலைத்தளங்களில் உலவி வரும் பொய் மற்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவர் வீட்டில் தனிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“எனக்கு கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமையில் உள்ளேன். அடுத்த சில நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.

கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுகிறேன். சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி வரும் பொய், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும், அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன். செயல்பட்டும் வருகிறேன்.

சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் கழகத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம். ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்” எனக் கூறியுள்ளார்.