இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்: சமந்தா குறித்து அதிதிராவ் ஹைத்ரி

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தப் படம் ’ஜானு’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அதில் விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்த், த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியில் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் அஜய்பூபதி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஜானு படத்தின் தோல்வியால் அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக இந்த படத்தில் அதிதிராவ் ஹைத்ரி நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. ஜானு படத்தின் தோல்வியால் தான் சமந்தா நீக்கப்பட்டார் என்று தெலுங்கு ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து அதிதிராவ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

இந்த விஷயத்தை சொல்வது முக்கியம் என்று கருதுகிறேன். ஒரு படத்தின் வெற்றி அல்லது தோல்வி ஒரு நட்சத்திரம் மீது இருக்கும் நம்பிக்கையை கெடுத்துவிடாது. இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். ஒரு இயக்குனர் அல்லது அல்லது தயாரிப்பாளருக்கு எது சரி, எந்த நட்சத்திரத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற மரியாதையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.