Download App

Adithya Varma Review

'ஆதித்யவர்மா' :  16 அடி பாய்ந்த குட்டி சீயான்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கிரிசய்யா இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் 'ஆதித்யவர்மா' திரைப்படம், ஏற்கனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விக்ரம் வழிகாட்டுதலுடன் இந்த படம் உருவாகியிருந்ததால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

மருத்துவ கல்லூரி மாணவரான ஆதி (துருவ் விக்ரம்) மிகச்சிறந்த டாக்டராக உருவாகிறார். கல்லூரி முதல்வர், டீன் முதல் அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தாலும் அடக்க முடியாத கோபம் அவரது மைனஸ் ஆக உள்ளது. ஆனால் தன்னுடைய கோபம் நியாயமானது என்றும், மனதில் சரி என்று தோன்றுவதைத் தான் செய்வதாகவும், இதனை தவறு என்று சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது ஆதியின் வாதமாக உள்ளது. இந்த நிலையில் கல்லூரிக்கு புதிதாக சேரும் மீராவை (பனிதா சந்து) பார்த்ததும் காதல், கோபம் கட்டுப்படுதல் ஆகியவற்றை உணரும் ஆதி, மீராவுடன் தன் முழு வாழ்க்கையையும் வாழ ஆசைப்படுகிறார். ஆனால் மீராவின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிக்கின்றனர். வழக்கமான கோபம் காரணமாக மெச்சூரிட்டி இல்லாமல் மீராவின் தந்தையிட நடந்து கொண்டதால் ஆதியின் காதல் தோல்வி அடைகிறது. மீராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் உண்மையான காதல் என்றுமே தோற்காது என்பது காதலின் விதி என்பதால் இந்த காதலின் அடுத்தகட்டம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

நடிகர் விக்ரமுக்கு சரியான வழிகாட்டி இல்லாததால் 'சேது' என்ற ஒரு வெற்றிப்படத்தில் நடிக்க அவருக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் துருவ் விக்ரமுக்கு விக்ரம் என்ற அனுபவசாலியின் வழிகாட்டுதல் காரணமாக முதல்படமே வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னதான் வழிகாட்டுதல் இருந்தாலும் துருவ் தன்னுடைய கேரக்டரை முழுமையாக உள்வாங்கி, அவரது தந்தையை போல் கேரக்டராகவே மாறிவிட்டார். காதலை பளிச்சென்று வெளிப்படுத்தும் விதம், காதல் தோல்வி அடைந்தால் ஒரு இளைஞன் எந்த லெவலுக்கு போவான் என்பதையும், தந்தை ஒரு மிகப்பெரிய சோகத்தில் இருக்கும்போது அவருக்கு ஆறுதல் கூறும் விதமும், பாட்டியிடம் தனது காதலை சொல்லி காதலியை அறிமுகப்படுத்தும் காட்சியும், கிளைமாக்ஸில் மெச்சூரிட்டியாக மீராவிடம் பேசுவதும், உண்மையாகவே துருவ்வுக்கு இது முதல் படம் தானா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நல்ல கதையை தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவின் உச்சத்தை துருவ் தொடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

நாயகி பனிதா சந்துவுக்கு முதல் பாதியில் மட்டும்தான் வேலை. அதன்பின் கிளைமாக்ஸில்தான் தலை காட்டுகிறார். முதல் பாதியில் அவர் வாய், பேசுவதை விட அதிகமாக முத்தத்திற்குத்தான் உதவுகிறது. நடிப்புக்கு அவரது கண்ணே போதும். கிளைமாக்ஸ் காட்சியில் பனிதாவின் நடிப்பு அற்புதம்

லீலா சாம்சன் ஒருசில காட்சிகளில் வந்தாலும் மனதை தொடுகிறார். பகவதி பெருமாள், ராஜா இருவருக்கும் குறைந்த காட்சிகள் என்றாலும் மனதில் பதியும் கேரக்டர். ப்ரியா ஆனந்த் இந்த படத்திலும் இருக்கின்றார் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. துருவ்வின் நண்பராக நடித்திருக்கும் அன்புதாசன் நடிப்பு ஓகே ரகம்

ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். இரண்டாம் பாதியில் போதைக்காட்சிகள் கொஞ்சம் அதிகம் இருந்ததை எடிட்டர் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ராதன் இசையில் இரண்டு பாடல்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தபின்னரும் முணுமுணுக்க வைக்கின்றது. பின்னணி படத்திற்கு மிகப்பெரிய பலம்

இயக்குனர் கிரிசய்யா, 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் வேலை செய்ததால் ஒரிஜினல் படத்தை ஓரிரண்டு காட்சிகள் தவிர அப்படியே எடுத்துள்ளார். துருவ்வின் ஒத்துழைப்பு அதிகம் என்பதால் ஒரு சிறப்பான படத்தை அளித்துள்ளார். தொய்வில்லாத திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், அனைத்து தரப்பினர்களும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கிளைமாக்ஸ் என இந்த படத்தை ஒரு முழுமையான காதல் படமாக உருவாக்கியுள்ளார். இளைஞர்கள் மற்றும் காதலர்கள் இந்த படத்தை  திரும்ப திரும்ப பார்த்து கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் அர்ஜூன் ரெட்டி படத்தை பார்த்தவர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவான் இந்த 'ஆதித்ய வர்மா'
 

Rating : 3.0 / 5.0