புதுமுகங்களை வைத்து பல நல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமாரின் அடுத்த படைப்பு ‘அதே கண்கள்’. அறிமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் சி.வி.குமாரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் சொல்லும் படமாக அமையுமா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
வருண் முரளி (கலையரசன்) ஒரு சிறந்த சமையல்காரர் மற்றும் உணவக உரிமையாளர், கண்பார்வையை இழந்தவர். அவரது தோழி சாதனா ஒரு பிரபல தமிழ் வார இதழில் நிருபராகப் பணிபுரிகிறார். சாதனாவுக்கு வருண் மேல் காதல் வர. வருணுக்கோ அவரது உணவகத்துக்கு வந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு வாங்கிச் செல்லும் தீபா மீது காதல்.
கடன் தொல்லையில் சிக்கியிருப்பதாகச் சொல்லும் தீபாவுக்கு உதவ முன்வருகிறார் வருண். ஆனால் திடீரென்று ஒரு விபத்தில் சிக்கி அதன் மூலம் அவருக்கு கண்பார்வை கிடைத்துவிடுகிறது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் தீபாவைக் காணவில்லை.
இதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளில், தீபாவின் தந்தை ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டதை அறிந்துகொள்ளும் வருண் அதைப் பற்றி விசாரிக்க கன்யாகுமரிக்கு செல்கிறார். அங்கு கான்ஸ்டபிளாக இருக்கும் பஞ்சு (பாலா சரவணன்) உதவியுடன் விசாரணையைத் தொடங்குகிறார்.
தீபாவை சுற்றி, அவரது அப்பாவின் மரணத்தைச் சுற்றி உள்ள மர்மங்களை தன் விசாரணையின் மூலம் கண்டறிந்து பிரச்சனைகளை எப்படித் தீர்க்கிறார் வருண் என்பதே மீதிக் கதை.
ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கும் அறிமுக திரைக்கதை எழுத்தாளர்-இயக்குனர் ரோஹின் வெங்கடேசனைப் வெகுவாகப் பாராட்டலாம். பல்வேறு துணைக் கதைகளைக் கொண்டிருக்கும், முன்னுக்குப் பின் நகரும் திரைக்கதையை குழுப்பமில்லாமலும் சில பல ட்விஸ்ட்களுடனும் படைத்திருக்கிறார். அதோடு பாலா சரவணன் துணையுடன் ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் போக்கை பாதிக்காத வகையில் நல்ல நகைச்சுவையையும் இணைத்திருக்கிறார்.
ஒரு புள்ளிக்கு மேல் முதல் பாதியில் சுவாரஸ்யமான அம்சங்களோ புதுமையோ இல்லாமல் தொய்வடைகிறது. இடைவேளையில் இரண்டாம் பாதி குறித்து ஏற்படும் எதிர்பார்ப்பு பெருமளவில் திருபதியளிக்கும் விதத்தில் உள்ளது.
இரண்டாம் பாதியின் மையப் பகுதியில் கதையின் முக்கிய திருப்பம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆனாலும் வில்லன் பாத்திரம் தொடர்பான சர்ப்ரைஸ் மற்றும் அவரது பின்னணி விவரிக்கப்பட்ட விதத்தில் இருக்கும் புதுமை ஆகியவை சபாஷ் போட வைக்கின்றன. கதையை முன்னுக்குப் பின் நகரும் திரைக்கதையுடன் சொல்லி இருப்பது அடுத்து என்ன என்ற பார்வையாளர்களை எதிர்பார்க்கவைப்பதில் பெருமளவு உதவுகிறது.
சில லாஜிக் சறுக்கல்கள் இல்லாமல் இல்லை. கதையை முன்னகர்த்திச் செல்வதில் பெரும்பங்கு வகிப்பதால் இவற்றை கடந்து போகவும் முடியவில்லை. ஒரு மொபைல் சர்வீஸ் கடை வைத்திருப்பவர் ஃபோன் நம்பர்களை ட்ரேஸ் செய்து அவற்றுக்கு வந்த அழைப்புகள். ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது சற்று நம்பகத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கலாம். அதே போல் அனைத்து கார் மெக்கானிக்குகளும் தங்களிடம் சர்வீஸ் செய்தவர்களின் தகவல்களை ஒரு கான்ஸ்டேபிள் கேட்டவுடன் எந்த கேள்வியும் கேட்காமல் தந்துவிடுவதும் நம்பக்கூடியதாக இல்லை.
ஒட்டுமொத்த படம் சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
என்றாலும் கலையரசன் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். பார்வையற்றவராக வரும் காட்சிகளில் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்.
வலுவான கதாபாத்திரத்தைப் பெற்றிருக்கும் ஷிவதா மிகச் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். இவரது நடிப்புத் திறமையை கோலிவுட் இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார். ஜனனி, கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். இரண்டு பெண்களுமே சிறப்பான உடையமைப்புடன் அழகாகக் காட்சி அளிக்கின்றனர்.
கிப்ரானின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. பாலா சரவணன் சிர்ப்புக்கு உத்தரவாதம் தருகிறார்.
வில்லனுக்கு ஒரு தீம் பாடல் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனமான யோசனை. பின்னணி இசையும் த்ரில்லர் படத்துக்குத் தேவையானதைக் கச்சிதமாகத் தருகிறது.
ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில் சிறப்பான விஷுவல்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. லியோ ஜான் பாலின் படத்தொகுப்பில் குறை ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் ‘அதே கண்கள்’ அனைவரும் பார்த்து ரசிக்கத்தக்க த்ரில்லர் படம். முதல் பாதியின் தொய்வு, இரண்டாம் பாதியில் சில லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் வெகு சிறப்பாக இருந்திருக்கும். இவற்றைத் தவிர அந்த சர்ப்ரைஸ் வில்லன் கதாபாத்திரம் படத்துக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது.
Comments