சலூன் கடைக்கு செல்ல ஆதார் அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,June 02 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திடீரென சலூன் கடைகள் அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் விவரங்களை சலூன் கடைகாரர்கள் பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று முதல் சலூன் கடைகளுக்கு முடிவெட்ட செல்வோர் ஆதார் அட்டையை கையில் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சலூன் கடைகளில் முடிவெட்டி செல்பவருக்கு கொரோனா ஏற்பட்டால் அவர்களை எளிதில் அடையாளம் காணவே இந்த ஏற்பாடு என தமிழக அரசு அறிவித்துள்ளது.