டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல் ஆதார் அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை
- IndiaGlitz, [Friday,December 02 2016]
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் தற்போது ஆன்லைனில் பணபரிவர்த்தனை செய்யப்பட்டு வருவது போல் விரைவில் ஆதார் அட்டை மூலமும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஏதுவாக பிரத்யேக செயலி ஒன்று தயாராகி வருகிறது.
தற்போது ஆதார் அட்டை பயோ மெட்ரிக் அடிப்படையில் இயங்கி வருவதால் இந்த ஆதார் அட்டையை வெறும் அடையாளங்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் பல்வேறு துறைகளிலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றே ஆதார் எண் அடிப்படையிம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான செயலியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தலாம். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் போன்ற இடங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்வேர்டு, பின் நம்பர் போன்றவை இல்லாமல் ஆதார் எண் மூலம் பரிமாற்றம் மேற்கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய யுஐடிஏஐ-ன் தலைமைச்செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே, 'வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாமல் பரிமாற்றம் செய்ய ஆதார் எண்ணை பயன்படுத்த முடியும். பயோமெட்ரிக் மூலமான அடையாளம் போதும். பரிமாற்றம் செய்ய வேண்டிய பணம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து வர்த்தக நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பலாம்' என்று கூறினார்.