மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த தமிழ் நடிகை… முதல் டிவிட்டிலேயே அசத்தல்!

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை சந்தித்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் பிரபல நடிகை ஒருவர் அவரது கட்சியில் இணைந்துள்ளார். மேலும் அவருடைய முதல் டிவிட்டர் பதிவிலேயே ரசிகர்களை அசர வைத்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து இயக்குநர் மணிரத்தினம் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துவரும் நடிகை வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி தனித்தே போட்டியிட்டது. அப்போது சில திரை பிரபலங்கள், சோஷியல் மீடியா பிரபலங்கள் எனப் பலரும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இதைத்தவிர நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்து ஆதரவு அளித்திருந்தார்.

இதையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி தனித்தே போட்டியிடுமா? அல்லது வேறு யாருக்காவது ஆதரவு அளிப்பார்களா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் பல தமிழ் சினிமாக்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் நடிகை வினோதினி வைத்யநாதன் கட்சி தலைவரான கமல்ஹாசனை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்துள்ளார். மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘காஞ்சிவரம்’ திரைப்படம் மூலம் சினிமாவிற்கு வருகை தந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, ‘யமுனா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ‘ஜிகிர்தண்டா’, ‘பிசாசு’, ‘ஓகே கண்மணி’, ‘ராட்சசன்’, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவ்வபோது அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது சமூகவலைத் தளப்பக்கத்தில் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே அரசியல் ஆர்வம் கொண்ட இவர் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் கட்சியில் இணைந்த உடனேயே அவர் பதிவிட்டு இருக்கும் “ஒரு சீட்டு கூட இல்லையே? என்று கடவுள் கேட்பது போலவும் அதற்கு ஆரம்பிக்கலாமா?” என்று துவங்குவது போலவும் நீண்ட நெடிய அரசியல் கதையை பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் வந்த உடனேயே ஆரம்பித்து விட்டீர்களா? என்று அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.