முதல்வரை அடுத்து வரலட்சுமி சந்தித்த இன்னொரு விவிஐபி
- IndiaGlitz, [Wednesday,June 14 2017]
பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று சந்தித்து தனது புதிய அமைப்பான 'ஷேவ் சக்தி' குறித்து விளக்கம் அளித்ததோடு, பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக சில கோரிக்கைகளை முன்வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் முதல்வருடனான சந்திப்பை அடுத்து நேற்று டெல்லியில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.செளத்ரி அவர்களை நடிகை வரலட்சுமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் மத்திய அமைச்சரிடம் வரலட்சுமி மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், 'பெண்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் விசாரிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றம் வேண்டும் என்றும், பெண்கள் தொடர்பான வழக்குகளின் குற்றத்தன்மையை விசாரிக்க நவீன புலனாய்வுக்கருவிகள் வசதிகளுடன் கூடிய அதிகாரிகள் தேவை என்பதையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அமைச்சரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியார்களைச் சந்தித்த வரலட்சுமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் மகளிர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சரை கேட்டுக்கொண்டேன். இதனை ஏற்றுக்கொண்ட அவர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 5 முதல் 6 மகளிர் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்டந்தோறும் ஒரு மகளிர் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கூறியுள்ளார்.