பெண்களின் பாதுகாப்புக்கு நடிகை வரலட்சுமி கூறிய யோசனை!

நடிகை வரலட்சுமி பெண்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் உள்ள பெண்களுக்கு பல துன்புறுத்தல் ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோவை நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.

இது பெண்களுக்காக ஒரு முக்கியமான விஷயம். பல பெண்கள் இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில் குடும்ப கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். டொமஸ்டிக் அப்யூஸ் என்று சொல்லக்கூடிய இந்த கொடுமையை பல பெண்கள் அனுபவித்து வேறு வழியில்லாமல், அதில் இருந்து தப்பிக்க முடியாமல் வீட்டில் மாட்டி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உதவி எண் உள்ளது.

1800 102 7282 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உதவி கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இந்த நம்பரை கொடுத்து உதவி செய்யுங்கள். மேலும் இந்த நம்பரை பெண்களிடம் கொடுக்கும்போது இரகசியமாக கொடுங்கள். இந்த நம்பரை கொடுக்கும் போது குழந்தைகள் உள்பட யாராவது பார்த்து விட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தனியாக இருக்கும்போது இந்த நம்பரை கொடுங்கள்.

இந்த விஷயம் வயது, செல்வாக்கு, படித்தவர், படிக்காதவர் என்பது பார்த்து வரக் கூடிய விஷயமல்ல. இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எந்தப் பெண்களுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே உடனடியாக இந்த எண்ணை அனைவருக்கும் பகிருங்கள் என்று நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.