இன்று நடிகை வரலட்சுமி திருமணம்.. வரவேற்பு எப்போது? சரத்குமார் வெளியிட்ட அறிவிப்பு..!
- IndiaGlitz, [Tuesday,July 02 2024]
நடிகை வரலட்சுமி திருமணம் இன்று நடைபெறும் நிலையில் அவரது வரவேற்பு நிகழ்ச்சி எப்போது என்பது குறித்து அறிவிப்பை சரத்குமார் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
நடிகை வரலட்சுமி கடந்த சில வருடங்களாக மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும், அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் நிக்கோலாய் சச்தேவ் - வரலட்சுமி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தாய்லாந்தில் இன்று திருமணம் நடைபெறும் நிலையில் நாளை திருமண வரவேற்பு நடைபெறும் என்று நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் ’எனது மகள் செல்வி வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நாளை அதாவது ஜூலை மூன்றாம் தேதி புதன்கிழமை அன்று மாலை நடைபெறுவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கால அவகாசம் குறைவாக இருந்ததால் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்தும், அலைபேசியில் தொடர்பு கொண்டு அழைக்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் திருமணம் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு குடும்பத்தோடு திருமண தம்பதிகளும் உங்கள் அனைவரையும் சந்திக்க இருப்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை ஜூலை 4ஆம் தேதி உங்களுக்கு வந்தடைய செய்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து நாளை வரலட்சுமி -நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நடைபெறுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.