ஆர்ஜே பாலாஜி எனக்கு டயலாக்கே சொல்லல, நானா தான் நடிச்சேன்: ஊர்வசி

சமீபத்தில் வெளியான ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் ஊர்வசியின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. சூரரைப்போற்று படத்தில் எந்த அளவுக்கு சீரியசாக நடித்திருந்தாரோ, அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க நகைச்சுவை அம்மா கேரக்டரில் ஊர்வசி இந்த படத்தில் நடித்து இருந்தார். அவருடைய நடிப்பிற்கு மிகச் சிறந்த பாராட்டு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக் பேட்டியின்போது ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக திடீரென அம்மன் தங்களுக்கு பெரிய வீடு பணம், வசதி வாய்ப்பு எல்லாம் கொடுத்த பின்னர் வரும் காட்சியில் ஆர்ஜே பாலாஜி எங்கள் யாருக்குமே டயலாக் கொடுக்கவே இல்லை. திடீரென அதிர்ஷ்டம் கொட்டினால் உங்களுக்கு என்ன தோன்றுமோ, அதை செய்யுங்கள் என்று கூறிவிட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பின்னர் நாங்களாக யோசித்து என்ன செய்ய என்றே தெரியாமல் ஆளாளுக்கு வசனம் பேசினோம். அதைவிட அந்த காட்சியில் நாங்கள் என்ன பேசினோம் என்பதை டப்பிங்கில் ஞாபகப்படுத்தி பேசியது பெரிய காமெடி என்று கூறினார்.

அதே போல் நீட் நீட் என்ற காட்சிக்கான வசனத்தை பாலாஜி சொல்லிக் கொடுக்கும்போது ’ஓவர் ஆக்டிங் போல் இருக்குமே’ என்று தயங்கினேன். ஆனால் பாலாஜி என்னை திருப்தி படுத்தி நான் பேசும்போது தான் ஓவர் ஆக்டிங்காக இருக்கும், நீங்கள் பேசும்போது ஓவர் ஆக்டிங்கா இருக்காது, முதல்ல உங்களுக்கு ஓவர் ஆக்டிங் வராது என்று என்னை சமாதானப்படுத்தினார்.

மேலும் இந்த படத்தில் எனக்கு நயன்தாராவுடன் ஒரு நட்பு கிடைத்தது. உண்மையில் இந்த கேரக்டரில் நடிக்க எனக்கு தேதி இல்லாமல் இருந்த நிலையில் நயன்தாரா என்னிடம் நீங்கள் தான் இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் மலையாளத்தில் திலீப் படத்தில் கமிட் ஆகியிருந்த நிலையில் அவர்தான் திலீப்பிடம் பேசி கால்ஷீட்டை மூக்குத்தி அம்மன் படத்திற்காக மாற்றி தந்தார்கள். அது எனக்கு உண்மையில் மறக்க முடியாத அனுபவம்’ என்று ஊர்வசி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.