த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேருவது உண்மையா? தாயார் உமாகிருஷ்ணன் விளக்கம்!
- IndiaGlitz, [Monday,August 22 2022]
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் செயல்பட போவதாக கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடிகர் த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும், தற்போது கூட அவர் இளம் கதாநாயகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் ஆறு படங்கள் நடித்து வருகிறார் என்பதும் மேலும் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் த்ரிஷா திடீரென அரசியலில் குதிக்கப் போவதாகவும், தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் ஊடகமொன்றுக்கு அளித்த விளக்கத்தில், ‘என்னிடம் நிறைய பேர் இதுகுறித்து கேட்கிறார்கள். அப்படியெல்லாம் சத்தியமாக கிடையாது. த்ரிஷா அரசியலில் சேர இருப்பதாக வெளியான செய்தி பொய்யான செய்தி. அவர் திரையுலகில் பிஸியாக இருக்கிறார், அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி வருகிறார். இதுபோன்ற செய்திகள் எப்படி வெளியாகிறது என்று எனக்கு தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து த்ரிஷா அரசியலில் குதிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.