தங்கையாரே..... கனிமொழி எம்பிக்கு கமல், ரஜினி பட நடிகை எழுதிய கடிதம்!

சமீபத்தில் நெல்லையில் பேட்டியளித்த திமுக எம்பி கனிமொழி அவர்கள் ரஜினி, கமலுக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று கூறியிருந்தார். கனிமொழியின் இந்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கமல் கட்சியின் நிர்வாகியும், ரஜினி, கமலுடன் பல படங்களில் நடித்தவருமான ஸ்ரீப்ரியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசன்‌ ரஜினிக்கு வாக்களித்து வாழ்க்கையை வீணாக்க மக்கள்‌ விரும்பவில்லை” என்று அன்பு சகோதரி கனிமொழி அவர்கள்‌ நெல்லையில்‌ பேட்டி அளித்ததாக தகவல்‌...

சகோதரி..! தாங்கள்‌ அரசியலில்‌ என்னை விட மூத்தவர்‌. இருப்பினும்‌ சில உண்மைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது... எம்‌ தலைவர்‌ நம்மவர்‌ மற்றும்‌ நண்பர்‌ ரஜினி அவர்களைப்பற்றிய விமர்சனம்‌ அவர்கள்‌ திரைத்துறையை சார்ந்தவர்கள்‌ எனில்‌, உங்கள்‌ தந்தையார்‌, என்‌ பெரும்‌ மரியாதைக்குரிய நம்‌ தலைவர்‌ ஐயா அவர்கள்‌, திரு.மாறன்‌, திரு .அமிர்தம்‌, 'திரு.உதயநிதி, திரு.ஸ்டாலின்‌, திரு.செல்வம்‌ மற்றும்‌ சன் பிக்சர்ஸ் (யார்‌ பெயராவது விடுபட்டு இருந்தால்‌ மன்னிக்கவும்‌) என அனைவரும்‌ திரைத்துறையில்‌ ஈடுபட்டவர்கள்‌ என்பதை உங்களுக்கு எடுத்து சொல்லும்‌ துரதிர்ஷ்டம்‌ எனக்கு! இல்லை அவர்கள்‌ வயதை குறித்து உங்கள்‌ கருத்து என்றால்‌ அதற்கு, மேல்‌ குறிப்பிட்டுள்ள பெயர்கள்‌ சாலப்பொருந்தும்‌!

மக்களுக்கு மாற்றம்‌ தேவை நல்ல ஆட்சியை கொண்டு வரவேண்டும்‌ என்று வருபவர்களை வரவேற்று போட்டியிடுங்கள்‌... மூத்த தலைவராக பல தலைமுறை அரசியலைக் கண்டு வென்ற உங்கள்‌ தந்தையார்‌ விரும்பி அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்‌ “நம்மவர்‌ '. அந்த அரசியல்‌ மேதையின்‌ கணிப்பை கெளரவப்படுத்துங்கள்‌ தங்கையாரே....

இவ்வாறு ஸ்ரீப்ரியாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.