குண்டர் சட்டத்தில் தமிழ் நடிகை கைது: பலரை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக புகார்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

'ஆடி போனால் ஆவணி' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி. இவர் வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் செய்வதாக ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தற்போது நடிகை ஸ்ருதியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவரிடம் ஆன்லைனில் அறிமுகமாகி அதன்பின்னர் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.41 லட்சம் வரை நடிகை ஸ்ருதி மோசடி செய்துள்ளார். இவருக்கு இவரது தாயார் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன் கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது, ஸ்ருதி பாலமுருகனை போல் பலரை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. இதனையடுத்து நடிகை ஸ்ருதி மற்றும் அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோசடியாக பெற்ற பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ருதி குடும்பத்தினர் மியுட்சுவல் ஃபண்ட், தங்க, வைர நகைகள் உள்பட பல்வேறு வகைகளில் முதலீடு செய்துள்ளனர்.