ரஜினி, கமல் பட நாயகியின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக்: போலீஸில் புகார்

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’, ‘சிவா’, கமல்ஹாசன் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக கடந்த 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷோபனா. நாட்டிய பேரொளி பத்மினியின் உறவினரான இவர் தற்போது தனது நடனப்பள்ளி மூலம் ஏராளமானவர்களுக்கு நடனம் கற்று தருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷோபனாவின் ஃபேஸ்புக் கணக்கு திடீரென மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை ஷோபனா, இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தனது ஃபேஸ்புக் கணக்கு மீட்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.