48 வயது ‘ஸ்லிம் பியூட்டி‘ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பிறந்தநாள்… வாழ்த்தும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

பாலிவுட் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. நடிப்பைத் தவிர நடனம், பிட்னஸ், கராத்தே என்று பன்முகத் திறமைகளைக் கொண்ட இவர் தனது 48 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மங்களூரிவில் சுரேந்திரா, சுனந்தா ஷெட்டி தம்பதிகளுக்கு 1975 ஜுன் 8 ஆம் தேதி பிறந்தவர் அஸ்வினி ஷெட்டி. அவர்தான் தற்போது ஷில்பா ஷெட்டி என்று சினிமா துறை பிரபலமாக இருந்து வருகிறார். இவருக்கு ஷமிதா ஷெட்டி என்றொரு தங்கையும் இருக்கிறார். அவரும் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படும் ஷில்பா ஷெட்டி தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து “மிஸ்டர் ரோமியோ” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தவிர “குஷி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.

சினிமாவைத் தவிர ஃபிட்னஸ் விஷயத்தில் ஷில்பா ஷெட்டிக்கு எப்போதும் அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில் தன்னுடைய வொர்க் அவுட் விஷயங்களை கடுமையாக பின்பற்றி வரும் அவர் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே தனக்குப்பிடித்த உணவுகளைச் சாப்பிடுகிறார். மற்ற நாட்களில் தீவிரமான உணவுக் கட்டுப்பாடுகளை எப்போதும் கடைப்பிடித்து வருகிறார்.

மும்பையிலுள்ள செம்பூர் செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் அடுத்து மாட்டுங்கா போடார் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே வாலிபால் மீது ஆர்வம் இருந்த நிலையில் வாலிபால் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். இதைத் தவிர கராத்தே கற்றுக்கொண்ட அவர் கறுப்பு பெல்ட் வாங்கிய ஒரு கராத்தே வீராங்கனையாகவும் வலம் வந்திருக்கிறார்

சிறிய வயதில் இருந்தே பரத நாட்டியத்தில் பயிற்சி பெற்று சிறந்த பரதநாட்டியக் கலைஞராகவும் நடிகை ஷில்பா விளங்கி வந்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவிலுள்ள நடிகைகளிலேயே இவர் அதிக உயரம் கொண்ட ஒரு நடிகை என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும் ஆங்கிலம் கன்னடம், மராத்தி, இந்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு, உருது, பிரெஞ்சு என்று பல மொழிகளைப் பேசும் ஆற்றலும் இவருக்கு உண்டு.

உலக அளவில் பிரபலமான ‘செலிபிரிட்டி பிக் பிரதர்ஸ்‘ நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட போது இனவெறி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து உலக அளவில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் வின்னராகவும் இவர் அறியப்பட்டார். தொடர்ந்து 1993 இல் ‘பாசிகர்‘ திரைப்படத்தில் துணை நடிகையாக பாலிவுட்டில் காலடி வைத்த இவர் 1994 இல் வெளியான ‘ஆக்’ திரைப்படத்தில் கதாநாயகியானார்.

அதைத் தொடர்ந்து சல்மான் கான், அக்ஷய் குமார் என்று பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முக்கிய நட்சத்திரமாக இருந்து வருகிறார். சினிமாவைத் தவிர ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கியிருந்தார்.

அதேபோல யோகா மீது அதிக ஆர்வம் கொண்ட ஷில்பா ஷெட்டி யோகா வாழ்க்கை குறித்து புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ராஜ்குந்த்ராவை காதலித்து 2009 நவம்பர் 22 இல் திருமணம் செய்து கொண்ட நடிகை ஷில்பாவிற்கு வியான் மற்றும் ஷமிஷா என்று இரு குழந்தைகள் உள்ளனர்.

இதேநேரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அந்த வகையில் தனது கணவர் ராஜ் குந்தாவுடன் இணைந்து ஐபிஎல் போட்டிகளுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையை கடந்த 2009 இல் வாங்கியபோது மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தவிர அவரது கணவர் ராஜ்குந்தரா ஆபாச படங்களை எடுத்து இணையத்தில் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஷில்பா ஷெட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் ‘குஷி கேடி தி டெவில்‘ எனும் த்ரில்லார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.