மோசடி வழக்கில் பிரபல நடிகை குற்றவாளி என தீர்ப்பு: பிற்பகலில் தண்டனை விபரம்!

  • IndiaGlitz, [Thursday,October 31 2019]

கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று கோவையில் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் காற்றாலை அமைத்து கொடுப்பதாக லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5.5 லட்சமும் சரிதா நாயரிடம் கொடுத்ததாகவும், ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மூவருக்குமான தண்டனை குறித்த விவரத்தை கோவை குற்றவியல் நீதிமன்றம் அறிவிக்க இருக்கின்றது. நடிகை சரிதா நாயர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.