ஆண் குழந்தைக்குத் தாயான 'சிம்பு' பட நடிகை… மகிழ்ச்சியாக வெளியிட்ட அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

நடிகர் சிம்பு நடித்த திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சனா கான் முதல் முறையாக ஆண் குழந்தைக்கு தாயாகியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சனா கான் மும்பையில் படிப்பை முடித்து கடந்த 2005லேயே சிறிய பட்ஜெட் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மாடலிங் மற்றும் விளப்பரப் படங்களில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘ஈ’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் கவனம் செலுத்திவந்த இவர் அடுத்து தமிழில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக 2008இல் ‘சிலம்பாட்டம்’ திரைப்படடத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதேபோல ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘பயணம்’ திரைப்படத்திலும் நடிகர் பரத்துக்கு ஜோடியாக ‘தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்கியா’ திரைப்படத்தின் கேமியோ ரோலில் இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலிவுட்டில் 2014 இல் வெளியான ‘ஜெய் ஹோ’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ் சீசன் 6‘ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு ரசிகர்களிடையே நற்பெயரை சம்பாதித்ததுடன் அந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தையும் தட்டிச்சென்றார்.

இப்படி 5 மொழிகளில் 14 திரைப்படங்களையும் 50 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களையும் நடித்திருந்த இவர் கடந்த 2020 இல் முஃப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்த இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருக்கிறேன் என்று தகவல் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கும் மகிழ்ச்சி தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து நடிகை சனா கான் மற்றும் அனாஸ் சையத் தம்பதிகளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.