தங்கையின் நடிகை அவதாரம்… இன்ஸ்டாவில் உருக்கமாக வாழ்த்தும் பிரபல நடிகை!
- IndiaGlitz, [Friday,December 03 2021]
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குநராக அவதாரம் எடுத்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘சித்திரை செவ்வானம்‘. பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய் எழுதி அதில் நடிகர் சமுத்திரகனி, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
மேலும் அப்பா- மகள் இடையிலான பாசப்பிணைப்பை கூறும் இந்தப் படத்தில் அறிமுக நடிகை பூஜா கண்ணன் சமுத்திரக்கனியின் மகளாக நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சாய்பல்லவியின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ், தெலுங்கு எனப்பல மொழிகளில் 250 க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கும் சில்வா முதல் முறையாக இயக்குநராக பணியாற்றி இருக்கும் “சித்திரை செவ்வானம்“ திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப் படக்குழுவிற்கு நடிகை சாய்பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து உள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், நீங்கள் அனைவரும் சித்திரை செவ்வானம் திரைப்படத்தைப் பார்த்து உங்கள் அன்பை அவளுக்கு வழங்க வேண்டும் என்று தனது தங்கைக்காக ரசிகர்களிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.
அதோடு, ஒரு கேரக்டரில் நடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பார்வையாளர்கள் பொழியும் அன்பும் அதிகப் போதையைக் கொடுக்கும். அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு சூழலிலும் உன்னை ஒரு சிறந்த நபராக வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை எப்போதும் பாதுகாப்பேன் என்று தங்கை குறித்து நடிகை சாய்பல்லவி உருக்கமாகப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு தற்போது தனிக்கவனம் பெற்றிருக்கிறது.