பீர் ஆரோக்கிய பானம் என்றால் மருந்துக்கடையில் விற்பீர்களா? அமைச்சருக்கு பிரபல நடிகை கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

தமிழகம் போலவே நமது அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்திலும் மதுவுக்கு எதிராக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன. இந்த நிலையில் ஆந்திர கலால் துறை அமைச்சர் கே.எஸ்.ஜவஹர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'பீர் ஆரோக்கிய பானம் இல்லை என யார் சொன்னது? அது ஆரோக்கிய பானம் தான் என்பதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன் என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரபல நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவுமான ரோஜா, அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். 'பீர் ஆரோக்கிய பானம் என்றால் அதை மருந்து கடைகளில் விற்பார்களா? என்று கேள்வி எழுப்பிய நடிகை ரோஜா, அரசு மது விற்பனையை ஊக்குவித்து வருவதாகவும், மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்றும், மாநில வருவாயை பெருக்க மது விற்பனைதான் ஒரே வழி என்று முடிவு செய்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுவிற்பனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் அந்த சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி மது விற்பனையை ஆந்திர அரசு செய்து வருவதாக நடிகை ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.