கனமான கேரக்டரில் நடித்து இதயத்தை நிரப்பிய நடிகை ரேவதி… அழகான திரைப்பயணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திய நடிகை ரேவதிக்கு இன்று பிறந்தநாள். 57 ஆவது பிறந்த நாளை சிறப்பித்து வரும் அவரைப் பற்றிய சிறிய தொகுப்பு.
தமிழ் சினிமாவில் நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர் நடிகை ரேவதி. இவர் அழுத்தமான கேரக்டரில் மட்டுமல்ல, குறும்புத் தனமாகவும் நடித்திருக்கிறார். அமைதியான கேரக்டரிலும் இவரை அடித்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு முக்கியத்துவமுள்ள ஒரு நடிகையாக இருந்த இவர் தமிழைத் தவிர தெலுங்கு, இந்தி என்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் பெரிய அளவிற்கு கொண்டாடப்பட்டார்.
அந்த வகையில் கேரளாவிலுள்ள கொச்சியில் கடந்த 4 ஜுலை 1966 இல் பிறந்தவர் ஆஷா கேலுன்னி நாயர். இராணுவ அதிகாரிக்கு மகளாக பிறந்த இவர் 7 வயதில் இருந்தே பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவின் ‘மண்வாசனை‘ படத்தில் நகரத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த இவர் கிராமத்துப் பெண்ணாக நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார். அதோடு இவர் பெயரும் ரேவதி என்று சினிமா ஏட்டில் பதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துவிட்ட இவர் ‘கைக் கொடுக்கும் கை’, ‘வைதேகி காத்திருந்தாள்’ என்று அடுக்கடுக்கான ஹிட் படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பாண்டியராஜ் இயக்கத்தில் ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’ திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பெரிய அளவிற்கு பேசப்பட்டது.
அதிலும் இயக்குநர் மணிரத்தினத்திற்கு பெரிய திருப்பமாக அமைந்த ‘மௌனராகம்’ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவிற்கு பேசப்பட்டதோடு இன்றைக்கும் நடிகை ரேவதியை திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக அவருக்கு அமைந்து விட்டது. அந்த அளவிற்கு திவ்யா எனும் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தொடர்ந்து ‘புன்னகை மன்னன்’, ‘அரங்கேற்றவேளை’ போன்ற படங்களில் நடித்த இவர் கனமான நடிப்பைக் காட்டிலும் இயல்பான காமெடியையும் வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் ‘மாஷா எனும் கேரக்டரில் நடிகர் பிரபுவுடன் இவர் செய்யும் சேட்டை வேறலெவல் நடிப்பை கொண்டிருக்கும் .
அதேபோல இயக்குநர் மணிரத்தின் இன்னொரு திரைப்படமான ‘அஞ்சலி‘ திரைப்படத்தில் அம்மாவாக நடித்து வொறொரு பரிமாணத்தையும் காட்டியிருந்தார். இப்படி ஒட்டுமொத்தமாக 80 களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்துவந்த இவர் இந்தியில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோடியாக ‘லவ்’ திரைப்படத்திலும் அதேபோல தெலுங்கில் ‘சீதம்மா பெல்லி‘, ‘கிலுக்கம், ‘அங்குரம்‘ போன்ற படத்தின் நடிப்பிற்காக போற்றப்பட்டார்.
அதேபோல மலையாளத்தில் ‘பட்டதே கிளிக்கூடிலும்‘, ‘காக்கோதிக்காவிலே அப்பூப்பன் தாடிகள்‘ எனும் திரைப்படத்திலும் இவர் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நடிப்பிற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாநில விருதுகளை வாங்கிக் குவித்த இவருக்கு ‘தேவர் மகன்’ திரைப்படம் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.
மேலும் ‘என் ஆசை மச்சான்’, ‘மறுபடியும்’ ‘மகளிர் மட்டும்’ போன்ற திரைப்படங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் நடித்த இவர் தொடர்ந்து நடிப்பிற்காகவும் நடனத்திற்காகவும் ரசிகர்களிடயே கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சுரேஷ் சுந்திர மேனனை காதலித்து 1986 இல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரேவதி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002 இல் அவரைவிட்டு பிரிந்தார். தொடர்ந்து 2013 இல் விவாகரத்துப் பெற்ற அவர் ஐவிஎஃப் முறையில் ‘மஹி‘ எனும் பெண் குழந்தைக்கு தாயாகி யாருமே தொட முடியாத மற்றொரு அசாத்தியத்தையும் செய்து காட்டினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments