பிரதமர் மோடியை திடீரென சந்தித்த நடிகை ராதிகா.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Friday,April 14 2023]
பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக பிரமுகர்கள் சிபி ராதாகிருஷ்ணன் எச் ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ராதிகா சரத்குமார் இதில் கலந்து கொண்டார்.
இந்த விழாவின் போது பிரதமர் மோடியை ராதிகா சந்தித்து பேசிய காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா உள்பட பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் நடிகை ராதிகாவும் பாஜகவில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகை ராதிகா சரத்குமார் கடந்த 2006ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார். அதன்பின்னர் 2007ஆம் ஆண்டு சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்ததால் அக்கட்சியின் துணை தலைவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.