பாடலாசிரியையாக மாறிய 'சென்னை 28' பட நடிகை

  • IndiaGlitz, [Saturday,June 24 2017]

தனுஷ், சிம்பு உள்பட ஒருசில நடிகர்கள் பாடலாசிரியர்களாகவும் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் தற்போது ஒரு நடிகையும் பாடலாசிரியையாக மாறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' உள்பட பல படங்களில் நடித்தவரும் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகளுமான நடிகை விஜயலட்சுமி தற்போது ஒரு படத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின்னர் வேறு படங்களில் நடிகை விஜயலட்சுமி நடிக்கவில்லை என்றாலும் அவரது கணவர் பெரோஸ் இயக்கி வரும் 'பண்டிகை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு முக்கிய பாடலை எழுத பிரபல கவிஞர்களிடம் சென்றும் திருப்தி அடையாமல் இருந்த கணவர் பெரோஸிடம், தானே அந்த பாட்டை எழுதுவதாக விஜயலட்சுமி கூறினாராம்.

பின்னர் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரம் கம்போஸ் செய்த டியூனுக்கு 'அடியே' என்று தொடங்கும் ஒரு பாடலை விஜயலட்சுமி எழுதியதாகவும், அந்த பாடலின் வரிகள் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலை நிகிதா என்பவர் பாடியுள்ளார்.

கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா, கருணாஸ், உள்பட பலர் நடித்து வரும் 'பண்டிகை' திரைப்படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது.