பெங்களூரு தொழிலதிபரை திருமணம் செய்த நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த நடிகை, பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் கரண் நடிப்பில் உருவான ’கொக்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா காந்தி. இதனை அடுத்து அவர் ’தொட்டால் பூ மலரும்’ ’வைத்தீஸ்வரன்’ ’திருவண்ணாமலை’ ’தலை எழுத்து’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஒரு கன்னட படத்தை இவர் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிக் பாஸ் கன்னடம் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஃபைனலுக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் நடிகை பூஜா காந்தி மற்றும் பெங்களூரை சேர்ந்த தொழிலாளர் விஜய் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கன்னட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனது திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பூஜா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.