குஷ்பு-தமிழிசை நடத்திய பரபரப்பான டுவிட்டர் போர்
- IndiaGlitz, [Thursday,May 25 2017]
பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் டுவிட்டரில் ஆவேசமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாஜக தொடர்ந்து தங்கள் கட்சியில் சேருமாறு அழைத்து கொண்டிருப்பது குறித்து குஷ்பு தனது டுவிட்டரில் கூறியபோது, 'ஒரு கட்சியில் ஒரு நபர் சேருவது என்பது அவருடைய கொள்கை அடிப்படையிலும், சுய உணர்வின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கடந்த 3 ஆண்டுகளாக வலது, இடது, சென்டர் என எல்லாத் திசைகளிலும் ரஜினியிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி எடுத்த முடிவு நானே சுயமாக எடுத்தது. என்னை காங்கிரஸில் சேருமாறு யாரும் தூது அனுப்பவில்லை' என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த தமிழிசை, 'நீங்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தீர்களா? அல்லது தாவினீர்களா? திமுகவில் சேர்ந்து காங்கிரஸுக்கு தாவியது எந்தக் கொள்கையின் அடிப்படையில் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க தூதுவர்கள் வரவில்லை. ஆனால் உங்களை திமுகவிலிருந்து விரட்ட ஆட்கள் இருந்தார்களே? என்று சற்று காட்டமாக கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த குஷ்பு, 'உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள் மேடம். நான் திமுகவிலிருந்து விலகி 6 மாதம் கழித்து தீர யோசித்தே காங்கிரஸுக்கு சென்றேன். ஆனால் காங்கிரஸிலிருந்து வெளியேறுகிறவர்களை அதே நாளில் பாஜகவில் சேர்த்துக் கொள்கிறீர்களே?. மேலும் என்னுடைய கொள்கை என்ன என்பதை உங்களால் படித்துச் சொல்ல முடியுமா? அது உங்கள் கற்பனைகளிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது. உங்களை மிகவும் வருத்திக் கொள்ளாதீர்கள். நான் திமுகவிலிருந்து வெளியேறும் போது நீங்கள் எனக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாகவோ அல்லது ஆலோசகராகவோ இருக்கவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகளையும் வதந்திகளையும் நம்புபவராக நீங்கள் இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது' என்று கூறினார்.
இதற்கு தமிழிசை, "நான் ஒரு டாக்டர். என்னால் மற்றவர்கள் மூளையில் உள்ளதை கணிக்க முடியும். நல்லவர்களை கட்சியில் சேர்க்க முயற்சிப்பது யாசகம் கேட்பது அல்ல. உங்கள் வார்த்தைகள் உங்களுடை சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன” என்றார்.
இவ்வாறு குஷ்பு, தமிழிசை இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றதால் டுவிட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.