லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Wednesday,November 18 2015]

டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். கடந்த 12 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி இடத்தை தக்க வைத்து வெற்றி நடை போட்டுவரும் நயன்தாராவுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த 'அய்யா' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆன நயன்தாரா இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சந்திரமுகி'யில் நடித்தார். முதல் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் கோலிவுட்டின் ராசியான நடிகை பட்டியலில் இணைந்து ஆரம்ப நிலையிலேயே முன்னணி நடிகையாக விளங்கி வந்தார்.

பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கஜினி' மற்றும் விஜய் நடித்த 'சிவகாசி' ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்த நயன்தாராவுக்கு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜீவாவுடன் நடித்த 'ஈ' படம் ஒரு திருப்புமுனையை கொடுத்தது.

இதன்பின்னர் நயன்தாராவை உச்சத்துக்கு அழைத்து சென்ற திரைப்படம் அஜீத்துடன் நடித்த 'பில்லா'. இந்த படத்தில் நயன்தாராவுக்கு போல்டான மற்றும் கிளாமரான கேரக்டர் என்பதால் அவருடைய நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. ஒரிஜினல் பில்லா' படத்தில் ஸ்ரீப்ரியா நடித்த கேரக்டரில் நடித்திருந்தாலும், நயன்தாரா முற்றிலும் தனது பாணியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பில்லா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தனுஷுடன் முதன்முதலாக நயன்தாரா இணைந்து நடித்த 'யாரடி நீ மோகினி' திரைப்படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இந்த படத்தில் ஐ.டி.நிறுவன ஊழியர் மற்றும் கிராமத்து பெண் என இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார்.

சந்திரமுகி' படத்திற்கு பின்னர் சிவாஜி', குசேலன்' ஆகிய இரண்டு ரஜினிகாந்த் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நயன்தாரா, பின்னர் விஷாலுடன் 'சத்யம்', மற்றும் அஜீத்துடன் 'ஏகன்' ஆகிய படங்களில் ஒரே வருடத்தில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன.

அதன்பின்னர் பிரபுதேவா இயக்கத்தில் இளையதளபதி விஜய்யுடன் 'வில்லு' படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்தபோதுதான் பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் பின்னர் சூர்யாவுடன் நயன்தாரா நடித்த 'ஆதவன்' படமும் சுமாரான வசூலை தந்தது.

இந்நிலையில் ஆர்யாவுடன் நயன்தாரா நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் நயன்தாரா, சந்திரிகா என்ற கேரக்டரில் நகைச்சுவையாகவும், ரொமான்ஸாகவும் நடித்திருந்தார். இதன்பின்னர் நயன்தாரா திடீரென திரையுலகில் இருந்து விலகவுள்ளதாகவும், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் நயன்தாரா நடித்த கடைசி படம் ஸ்ரீராமராஜ்யம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் பிரபுதேவாவுடன் திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திருமணம் நின்றது. இதன்பின்னர் மீண்டும் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடக்கினார் நயன்தாரா. இரண்டாவது இன்னிங்ஸில் நயன்தாரா நடித்த படங்களான ஆரம்பம், ராஜா ராணி ஆகிய இரண்டுமே அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

நயன்தாரா நடித்த குறிப்பிடத்தக்க படம் 'நீ எங்கே என் அன்பே. தனது கணவர் தீவிரவாதி என்று தெரிந்ததும், அவரை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் அழுத்தமான கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரில் வெளிவந்தது.

இளம் நடிகரான உதயநிதி ஸ்டாலினுடன் 'இது கதிர்வேலன் காதல் மற்றும் 'நண்பேண்டா' என இரண்டு படங்களில் நடித்த நயன்தாரா, சூர்யாவுடன் மீண்டும் இணைந்து 'மாஸ்' என்ற படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்', 'மாயா', நானும் ரெளடிதான்' ஆகிய மூன்று படங்களும் தொடர் வெற்றியை பெற்றதால் கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை இன்னும் தக்க வைத்து கொண்டிருக்கின்றார்.

மேலும் நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு', திருநாள்' மற்றும் 'காஷ்மோரா' ஆகிய மூன்று படங்கள் 2016ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது. இந்த மூன்றுமே மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்பதால் அடுத்த வருடமும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது முதலிடத்தை தக்க வைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நயன்தாரா தனது திரையுலக பயணத்தில் பிலிம்பேர் விருதுகள், விஜய் விருது, நந்தி விருது, எடிசன் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது என பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல நடிகைகளின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நயன்தாராவுக்கு இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை Indiaglitz சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

More News